search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் திட்டப்பணி"

    தொட்டியம் வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணை பனை பெருக்குத் திட்டத்தின் கீழ் சின்னபள்ளிபாளையம் கிராமத்தினைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வி சுந்தரம் என்பவர் வயலில் நடவு செய்யப்பட்டுள்ள பாமாயில் மரக்கன்றுகள், பாமாயில் மர சாகுபடியில் கிடைக்ககூடிய வருமானம், சந்தை நிலவரங்கள் மற்றும் பாமாயில் ஊடுபயிராக கோ-கோ, மஞ்சள், துவரை சாகுபடி குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது பாமாயில் சாகுபடி செய்துள்ள விவசாயி கலைச்செல்வி சுந்தரம் கூறும்போது,

    பாமாயில் சாகுபடியில் 1 ஹெக்டருக்கு 30 டன் வரை மகசூல் எடுத்து வருகின்றோம். இது மட்டுமல்லாமல் ஊடு பயிராக கோ-கோ, துவரை, வெங்காயம் முதலிய பயிர்களையும் சாகுபடி செய்து எங்களது வருமானத்தினை 2 மடங்காக கிடைக்கின்றது.

    பாமாயில் சாகுபடியில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைத்து 20-30 மூட்டை மகசூல் அதிகமாக பெற்று வருகின்றோம் என்றார்.

    ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பால்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பெரியகருப்பன், தோட்டக்கலை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தொட்டியம் தாசில்தார் ச.பிரகாஷ் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) புஷ்பாசிவக்குமார், வேளாண்மை துறை அலுவலர் நாகர்ஜூனா, சொட்டுநீர் பாசன நிறுவன முகவர் குமரவேல், பாமாயில் நிறுவனர் மருதை ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×